Tuesday, November 29, 2011

ஒரு முட்டாள்!


என்னடா இது இன்னும் யாரும் நாம கேட்ட கேள்விக்கு(நான்(நாம்)  யார்?)  பதில் சொல்லவில்லை.ஒருவேளை கஷ்டமான கேள்வி கேட்டுடோமோ? இல்ல நமக்கு சொன்னா புரியாதுன்னு யாரும் சொல்லலையோ? இல்ல யாருக்கும் பதில் தெரியாலையா?நான்னா நான் தான் இதை எப்படி என்னனு சொல்றது?ஏதோ ஒண்ணு நீ என்ன சொல்லணுமோ அதை சொல்லு இருக்கறதை(பிரச்சனையை ) யோசிக்கவே நேரம் இல்ல இதுல வேற நான் யார் அப்படின்னு யோசிச்சு பதில் சொல்லணுமாம்( mind  வாய்ஸ் கேட்குது). ஒரு சின்ன கதையை பார்த்திட்டு அப்பறம் நம்ம ஏன் நம்மை தேடறோம்  பார்போம்.

ஓங்கிய பெரும் காடு... அங்கே...  (ஹிஹி பாட்டு எல்லாம் இல்ல)அந்த காட்டின் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். அவன் நாள்தோறும் காட்டிற்கு சென்று விறகு வெட்டி,விற்று வரும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தான். அவன் காட்டில் நுழையும் முன் ஒரு அரசமரம் இருந்தது. அந்த அரச மரத்தின் நிழலில் ஒரு ஞானி அமர்ந்து இருந்தார். அவர் எல்லா நாட்களிலும் அங்கேயே அமர்ந்து இருப்பார். இவன் தினமும் தன் வேலைக்கு போகும் முன் அவரை வணங்கிவிட்டு போவாது அவன் வழக்கம். தினமும் அவன் வணங்கும் போதெல்லாம் அந்த ஞானி அவனை பார்த்து 'நீ ஒரு முட்டாள்' என்று மட்டும் சொல்வார். வேறு எந்த வாக்கியமோ ஆசிர்வாதமோ  அவர் சொல்லவே இல்லை. ஒவ்வொரு  முறையும் ஆவலுடன் சென்று ஆசி வாங்கும் போதெல்லாம் அவன் கேட்ட ஒரே வாக்கியம் 'நீ ஒரு முட்டாள்'.

ஒரு நாள் நேரடியாகவே அந்த விறகுவெட்டி கேட்டு விட்டான். தினம் என்னை 'நீ ஒரு முட்டாள்' அப்படின்னு சொல்றீங்களே ஏன் அப்படி சொல்றீங்கன்னு கேட்டான்.அதுக்கு அந்த ஞானி இந்த காட்டிற்குள் தினம் சுற்றி கொண்டு தினம் மரம் வெட்டி சென்று விற்று வாழ்க்கை நடத்துற.  இந்த காட்டில் இன்னும் கொஞ்ச தூரம் உள்ள போன அங்க ஒரு செம்பு சுரங்கம் இருக்கு. நீ அந்த செம்பு சுரங்கத்தை பாத்திருந்தா இப்படி தினம் தினம் வரவேண்டியது இல்ல. செம்பு எடுத்துட்டு போய் விற்றால் வாரத்துக்கு ஒரு தடவை வந்தா போதும். அதை பார்க்காம தினம் இப்படி வந்து மரம் வெட்டிகிட்டு இருக்கயே அதனால தான் 'நீ ஒரு முட்டாள்'. 

நமக்கு இந்த காட்டுல எல்லா இடமும் தெரியும் அப்படி இருக்கும் போது எப்படி செம்பு சுரங்கம் இருக்கறது தெரியாம போச்சு இவர் சொல்றதை நம்பறதா வேணாம்மா சரி இன்னும் கொஞ்சம் உள்ள போய் தேடி தான் பார்ப்போமே அப்படின்னு காட்டிற்குள் போய் கொஞ்சம் விழிப்போட தேடினான் . அவர் சொன்ன மாதிரியே ஒரு செம்பு சுரங்கம் இருந்தது. ஒரே சந்தோசம் தான் செம்பு கிடைச்சது. அது போக அவர் ஏன் என்னை முட்டாள் அப்படின்னு சொன்னார்ன்னு இப்போ விளங்கிச்சு. இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா இத்தனை நாள் தினம் வந்து கஷ்டப்பட்டு இருக்கவேண்டியது இல்லல.  

அன்றிலிருந்து வாரம் ஒருமுறை மட்டும் அந்த காட்டிற்கு வந்து செம்பு எடுத்து போய் விற்று வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான். எப்பொழுதும் போல் காட்டிற்கு உள்ள போகறதுக்கு முன் அந்த ஞானியை பார்த்து வணங்கி விட்டு தான் போனான். அந்த ஞானி 'நீ ஒரு முட்டாள் தான்' சொல்றதை நிறுத்தவே இல்ல. விறகு வெட்டிக்கு குழப்பமா போச்சு நீங்க சொன்ன மாதிரி நான் தான் செம்பு சுரங்கத்தை கண்டு புடுச்சிட்டேனே திரும்பவும் ஏன் "நீ ஒரு முட்டாள் 'ன்னு சொல்றீங்கன்னு கேட்டான்.   

இப்போ அந்த ஞானி விறகு வேட்டியை பார்த்து நீ இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் அங்க வெள்ளி சுரங்கம் இருக்குன்னு சொன்னார்.

அவனுக்கு ஆச்சிரயம்மா இருந்தது. இருந்தும் அந்த ஞானியை பார்த்து வெள்ளி சுரங்கத்தை பத்தி முன்னமே  சொல்லி இருக்கலாம்லன்னு கேட்டான். அதுக்கு ஞானி. நான் செம்பு சுரங்கத்தை பத்தி சொல்லும் போதே நீ நம்பல அப்படி இருக்கும் போது வெள்ளி சுரங்கத்தை பத்தி சொன்னா எப்படி நம்புவ? இப்போ இன்னும் கொஞ்சம் உள்ள போய் தேடி பார். அப்படின்னு சொல்லி அனுப்பினார்.     

எனக்கு பழக்கப்பட்ட காட்டில் ஏதோ செம்பு சுரங்கம் இருக்கறதை வேணா பார்க்காம விட்டிருக்கலாம் அதுக்காக வெள்ளி சுரங்கம் எல்லாம் எப்படி இருக்கும்? கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் கொஞ்சம் நம்பிக்கை உணர்வு அவனிடம் தோன்றி இருந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்ற தேடிய போது வெள்ளி சுரங்கத்தையும் கண்டுபிடித்தான்.

வெள்ளிகளை எடுத்துக்கொண்டு ஞானி இடம் திரும்பி வந்தான். இப்பொழுது நான் மாதம் ஒருமுறை வந்தால் போதும் ஆனால் உங்களை அடிகடி பார்க்க முடியாது உங்களை பிரியறது கஷ்டமா இருக்கு அதுவும் இல்லாமல் நீங்க சொல்ற "நீ ஒரு முட்டாள்' வாக்கியத்தை இனி கேட்க முடியாது. நீங்க சொல்லும் அந்த வாக்கியம் என்னக்கு பிடிச்சு போச்சு.  அதனால் வருத்தமா இருக்குன்னு சொன்னான். அதை கேட்ட ஞானி இப்போவும் நான் அதை தான் சொல்லறேன் 'நீ சர்வ நிச்சயமா முட்டாளே தான்' ன்னு சொன்னார். நான் வெள்ளி சுரங்கத்தை கண்டுபிடிச்ச பிறகுமா நான் முட்டாள்? ஆமாம் சந்தேகமே இல்லாம 'நீ முட்டாள் தான்' இன்னும் கொஞ்சம் உள்ள போனால் அங்க தங்க சுரங்கம் இருக்கு அதனால ஒரு மாதம் கழிச்சு வரவேண்டியது இல்ல நாளைக்கே வா-ன்னு சொல்லி அனுப்பினார்.

இப்போ அவனுக்கு அந்த ஞானி சொல்வதில் சந்தேகம் வந்திடுச்சு. அப்படி தங்க சுரங்கம் இருந்தால் இவர் ஏன் இங்க உட்காந்துகிட்டு இருக்கார் ஒரு வீடு இல்ல, மழைக்கு ஒரு குடை இல்ல, குளிருக்கு ஒரு கம்பளியோ ஒரு போர்வையோ கூட இல்ல,ஒரு நல்ல துணி இல்ல யாரவது வந்து உணவு கொடுத்தா உண்டு  இல்லாட்டி   வாரத்துக்கு ஒருதடவ ஊருக்குள்ள போய் பிச்சை எடுத்து சாப்பிடறார் இவ்வளவு கஷ்டபட்டுட்டு இருக்கார். இவர் கண்டிப்பா நம்மள கேலி பண்றார்ன்னு நினைச்சான். இருந்தாலும் அவர் சொல்றது உண்மையா மட்டும் தான் இருந்திருக்கு. இவரும் வித்தியாசமான ஆளா தான் இருக்கார். அவர் சொல்ற மாதிரி தங்க சுரங்கம் இருந்தால்?யாருக்கு தெரியும். ஒண்ணும் நஷ்டம் இல்ல அதனால தேடி போவோம்ன்னு முடிவு பண்ணினான்.               

அந்த காட்டின் உள்ளே இன்னும் சிறிது தூரம் தேடிச் சென்ற போது அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவர் சொன்னது போலவே ஒரு தங்க சுரங்கம். வாழ் நாள் முழுவதும் இந்த காட்டிலேயே மரம் வெட்டி சுற்றி திரிந்த நமக்கு இந்த தங்க சுரங்கம் பற்றி தெரியவில்லை ஆனால் இந்த காட்டின் ஆரம்பத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் அவருக்கு எப்படி தெரிந்தது. 

ஒரு பை நிறைய தங்கத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தான். இனியாவது 'நீ ஒரு முட்டாள்'ன்னு சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன்னு சொன்னான்.

அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவு இல்ல, அதனால் நாளை வா.” என்றார்.  


அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவில்லையா? , ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போனால் அங்கே வைரங்கள் இருக்கு. ஆனால் அதுவும் முடிவல்ல,


ஆனால் நான் உனக்கு அதிகப்படியா எதுவும் சொல்லமாட்டேன். ஏன்ன நான் சொல்லிட்டா உன்னால இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை பார்.” என்றார்.

அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் தான்னு சொல்றாரே, வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.



அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். “வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் தூங்கிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார். 


அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.”எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று!இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார்.


அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம்,“நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான்.


அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார்.


அவன்,“இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை”என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே இருக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்,” என்றார்.  


அவன் வைரங்களை கீழே போட்டான். “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான்.   


அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி. தகவல் அறிவுநிரம்பிய(நம்ம தான்)  ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல. 


விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.  


ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.”என்றார்.  


விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.


அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.


அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்” என்றார்.   

  
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ( நம்ம கருத்த சொல்லவேண்டாம்? அதுக்கு தான் ).

'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவவாக்கியர் பாடல்-494


இந்த பாடலுக்கும் மேலே உள்ள கதைக்கும்,நம்ம இதுவரை படித்த இந்த வலை பதிவில் உள்ள பதிவுகளுக்கும்  எதாவது சம்பந்தம் இருக்கா? ச்சே.. ச்சே.. அதை எல்லாம் சம்பந்த படுத்தி யோசிக்க கூடாது. நம்ம தேடுவோம்...     


5 comments:

  1. @அனானி மற்றும் கருப்புசட்டைகாரன், ராமன் யாருக்கு பொறந்தான் அப்பறம் பார்போம். நம்மள மொதல்ல பாப்போம். பகுத்தறிவு பற்றி பேசும் நீங்கள் பெரியாரை மற்றும் வீரமணி போன்றோரை பின்தொடர்வது எதற்கு? பகுத்தறிவுன்னு சொல்லறது என்னனு கூட யோசிக்காமல் அடுத்தவன் (அரை வேக்காட்டுதனமா) சொல்றதுக்கு ஆமாம் சாமி போடறதா? என்ன ஒரு பகுத்தறிவு....

    கொஞ்சம் இந்த பதிவில் சென்று படித்துவிட்டு வந்து சொல்லவும்
    http://vediceye.blogspot.com/2011/05/blog-post.html

    அப்படியே அந்த பகுத்தறிவு பன்னாடைங்க தளத்துல இருக்கற தலைப்பையும் கொஞ்சம் பகுதறிஞ்சிட்டு வாங்க பேசுவோம்.

    ReplyDelete
  2. @அனானி இட்ட இரண்டு அரைவேக்காட்டு லிங்குகளை நீக்குகிறேன். அதற்கான மறுமொழி மட்டும் மேலே.

    ReplyDelete
  3. நண்பரே ,

    இவர்களை போன்றவர்களுக்கு நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும் தன் காதில் போட்டுகொல்வதில்லை ...விடுங்கள் அவர்களை ..

    Regards,
    Shankar Sait

    ReplyDelete
  4. நண்பரே,

    /இவர்களை போன்றவர்களுக்கு நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும் தன் காதில் போட்டுகொல்வதில்லை ...விடுங்கள் அவர்களை .. //

    அதிலும் ஒரு நன்மை, அவன் போய் படித்தானோ இல்லையோ , நான் படித்தேன் ”http://vediceye.blogspot.com” அருமையாக இருந்தது.

    ReplyDelete
  5. @ஷன்கர் ,

    மிக்க நன்றி நண்பரே, உங்கள் ஆதரவிற்கு. என் அடுத்த பதிவு அதை போன்ற ஒரு ஆழமான பதிவு தான் என் தேடலில். காத்திருங்கள்.

    அன்புடன்
    பிரபு

    ReplyDelete