Friday, May 11, 2012

இறை வடிவம்..


நீண்ட இடைவெளி தேடலுக்கு பின் மீண்டும் ஒரு பதிவுடன் உங்களை அடைவதில் மகிழ்ச்சி. இடைவெளிக்கு காரணம் எதை பற்றி பதிவிடுவது என்று தெளிவின்மை தான். உங்கள் மறுமொழிகளால் ஒரு தலைப்பை தேர்ந்தேடுபோம் என்று காத்திருந்தேன் அனால் அதற்க்கு வாய்ப்புக்கள் இல்லாததால் நண்பர் ஷன்கர் அவர்களின் பதிவில் பாதியில்(அவரின் அலுவல் மற்றும் வேறு காரணங்களால்) நீண்ட இடைவெளியுடன் நின்ற தலைப்பு பரமாத்மாவின் வடிவம் என்ன ? (1),) நண்பர் ஷன்கர் அவர்களுக்கு நன்றிகளுடன் இதை தொடர்வோம்.

பரமாத்மா, இறைவன் அவன் வடிவம் எப்படி இருக்கும்? கோவிலில் உள்ள சிலைகள் மாதிரியா? அல்லது சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் சொல்லிச் சென்றது  போல் (அவர்கள் அதை தான் சொன்னார்களா?).அல்லது மற்ற மதத்தவர்/மார்கத்தவர் சொல்வது போல் எழு வானங்களுக்கு அப்பால் அமர்ந்திருப்பாரா?அல்லது பெரியார்/ நாத்திகர்கள் சொல்வது போல் அப்படி ஒன்றே இல்லையா?  தேடி பார்போம் திறந்த மனதுடன்.

கடைசி கேள்வியில் இருந்து பரமாத்மா/இறைவன் இல்லை என்றால் இந்த பிரபஞ்சம், அண்டம் எல்லாம் எங்கு  இருந்து எப்படி வந்தது? எல்லாம் இயற்கை அறிவியல் நிகழ்வு அப்படி என்றால் தானாய் நிகழ்ந்ததா? நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்புகள் இல்லை.ஏதோ ஒரு சக்தி அல்லது ஏதோ ஒன்றின் காரணமாக தான் நிகழ்ந்திருக்க  முடியும்.படைத்தவன் அன்றி ஒரு படைப்பு நிகழுமா? இங்க நாத்திகர்களின் பார்வை அவன் வடிவை வைத்து தான். கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் மடையன்,இப்படி இன்னும் நிறைய தொடரும். (அங்கு கடவுள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு 'நான்' 'என்னை'  என்று போட்டால் எப்படி இருக்கும்? எப்படி நிரூபிப்பது?) அது நமது தலைப்பு அல்ல அதை வேறு ஒரு சந்தர்பத்தில் பார்ப்போம்.

மற்ற மதத்தவர்/மார்க்கதவர்கள் சொல்வது போல் மேலே அமர்ந்து இருப்பார் அப்படியானால் அவருக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும். அவர் எப்படி எந்த வடிவில் இருப்பார் என்று அவர்கள் தான் சொல்லவேண்டும்.

சனாதன தர்மத்தில் கடவுளை எந்த வடிவில் உணர்கிறார்கள் என்று பார்ப்போம் 

1 . சனாதன தர்மத்தில் அடிபடையாக கடவுளாய் நாம் வணங்குவது பஞ்ச பூதங்கள். நீர், நிலம் ,காற்று,நெருப்பு(அக்னி), ஆகாயம். 
பஞ்ச பூதங்கள் என்ன வடிவமோ? இவைகள் அனைத்தும் முழுமையானவை(பரிபூரணமானவை) முழுமை அற்ற எதுவும் இல்லை.பஞ்ச பூதங்களின் எல்லை என்பது எது?
அவற்றின் எல்லையை எப்படி முடிவுசெய்வது?

வடிவம் என்றால் நாம்  சொல்லவருவது  - எல்லை.(Boundries) (Outline ) 

அதுவும் நமது இந்த சிறிய அறிவை வைத்துகொண்டு மிக பெரியவன் என்று சொல்பவனை வரையறுக்கிறோம். இப்படி இருப்பார் அப்படி இருப்பார் இதை செய்வார் இப்படி எல்லாம் இருந்தால் தான் அவர் கடவுள் அதுவும் நீங்கள் நினைப்பது போல் நடந்தால் மட்டுமே அவர் கடவுளாய் இருக்க முடியும். 

எல்லைகள்  இருப்பின் அது கடவுளாய்/பரம்பொருளாய்/பரமமாத்மாவாய் இருக்க முடியுமா?

பஞ்சபுதங்கள் அன்றி நமது இருப்பு  சாத்தியமா? 
உடல் - மண் (நிலம்) ,
சுவாசம் - காற்று ,
வெப்பம், - அக்னி (நெருப்பு) 
நீர் ,
பரந்த  மனம் - ஆகாயம் .  
  
அதற்காக கல், மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றை போய் அறிவற்று கடவுள்/ இறைவன் அப்படின்னு சொல்றாங்க என்பது யாரின் மடமை?

நமது ஐம்புலன்கள் வெளிமுகமாக படைக்கப்பட்டவை . அவற்றின் மூலம் வெளிஉலகில் உள்ளவற்றை மட்டுமே(External) பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ, சுவைக்கவோ, நுகரவோ முடியும். நம்முள் நிகழ்வதை அவை நமக்கு உணர்த்தாது. ஆனால்  நமக்கு எது நடந்தாலும், நாம் எதை தெரிந்து கொண்டாலும், நமது உடலின் மூலம் நமது அறிவால், மனத்தால், உணர்ச்சிகளால்  மட்டுமே அது உணர/தெரிந்து கொள்ள முடியும் இது அடிப்படை.  
சனாதன தர்மத்தில் சொல்வதை போல் கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் நம் உள்ளும் நிச்சயம் இருப்பான். உங்களுள் இருப்பதை பார்ப்பது (உணர்வது) எளிதா? அல்லது வெளியில் கடவுளை தேடுவதா ?  அதனால் நமக்கு முதல் படியாக கற்று தந்தது, பஞ்சபூதங்களை வணங்குவது.

சிறு குழந்தைக்கு எதாவது கற்று தர நாம் செய்வதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இது கை, கால், தலை என்று குறிப்பிட்டு காட்டுவோம்.அதை பார்த்து அது அதன் பெயர்களை கற்றுகொள்ளும். அதை போல தான் இது. உங்களுள்  உணர வெளிமுகமாக கற்றுத்தர படுவது.                                                                                                                                                                                                                                             
                                                                               அடுத்த நிலை ......... வடிவம் பெரும் ......... 

Wednesday, January 4, 2012

அந்தமும்மாகி...




ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - சமன்பாடு .

" E = mc2 என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்."

ஒரு திரை படத்தில்(அதில் தத்துவம் வேற கடவுள் இல்லைன்னு யாரு சொன்னது. கடவுள் இருந்தா நல்ல இருக்குமேன்னு தான் சொன்னேன்). பட்டாம்புச்சிக்கும் நிலநடுக்கத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது என்ற தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் படம். அந்த கருத்திற்காக அதை சொன்னேன்

E = mc2 , அந்த சமன்பாட்டை தனி தனியாக ஒவ்வொன்றாக விளக்க போவதில்லை. என் பதிவை படிப்பவர்கள் அனைவரும் அறிவியல் ஆர்வலர்களாய் இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆகையால் அதன் முடிவை  மட்டும் பார்ப்போம். அதுவே அனைவருக்கும் உகந்ததாய் இருக்கும்.

இன்றிய அறிவியல் மற்றும் அந்த சமன்பாடு சொல்வதெல்லாம்
அனைத்தும் ஒரே சக்தி அவை வெவ்வேறு வடிவங்களாக இருக்கின்றன.(Everything is one energy manifesting  into many  different  forms  /  what we call matter is energy )

சனாதன தர்மம்   மற்றும் சில மதங்கள் சொல்வது அனைத்தும்/அனைத்திலும்   இறைவன்  என்பது.

இரண்டும் ஒரே கருத்தை சொல்கிறதா இல்லை வேறு வேறு கருத்தா?

அனைத்தும்  ஒரே சக்தி
( Everything  is  One  energy / matter  is  energy ) - அறிவியல்  

அனைத்தும்/அனைத்திலும்  இறைவன் 
( God  is  in  everything / everywhere, everything is GOD )  -  ஆன்மிகம்.

இரண்டும் ஒரே கருத்தை தான் சொல்கிறது சொல்லப்பட்ட விதம் வேறு அவ்வளவு தான்.

அந்த அறிவியல் கோட்பாடு சொல்வதை தான் நமது முன்னோர்கள் நமக்கு உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள்.

அப்படியானால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், விஞ்ஞானிகளுக்கும் -  நமது ஞானிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?-- யோசிங்க..

அதுக்குள்ள மறுபிறப்பு கோட்பாடு பற்றி ஏதோ நிருபிக்கறதா சொன்னேன்ல அதை கொஞ்சம் பார்ப்போம்.

அறிவியலில் ஆற்றல் அழியாவிதி; ஆற்றல் அழிவின்மை விதி; சத்திக்காப்பு விதி - (law of conservation of energy ). கேள்விபட்டது உண்டா? 

இது தான் அந்த விதி-
“Energy cannot be created or destroyed, it can only be changed from one form to another.” 
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றோர் வகை ஆற்றலாக மாற்றலாம்.   

இது இன்று வரை அனைவராலும் ஒத்துகொள்ளபட்ட நிரூபிக்க பட்ட விதி. இதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

நமக்குள்ள சக்தி/ ஆற்றல் என்பது  இருக்கா ? - அப்படி என்றால் இறந்தவுடன் அந்த சக்தி/ஆற்றல் என்ன ஆகுது? அது அழியாது/அழிக்க முடியாது. (ஒரு வேளை தீர்ப்பு நாளுக்கு காத்திருக்குமோ?).

ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. -  பகவத்கீதை

அழிக்க முடியாது சரி அது இன்னொரு உடல் எடுக்கும் என்பது என்ன உறுதி?

இதுக்கும் அறிவியல் விதிகள் மூலம் கூட நிரூபிக்கலாம் 
அதை பற்றிய மேலும் தெளிவான விளக்கங்களை, அது எப்படி என்பது பற்றிய விளக்கங்களை வரும் பதிவுகளில் வாய்ப்பு இருந்தால் பகிர்கிறேன். உங்களுக்கு ஆழமான தேடல் மற்றும் விளக்கம் வேண்டுமெனில் உங்கள் கேள்விகளை, மறுமொழியில் இடுங்கள். பதில் அளிக்கிறேன். நன்றி. 

அறிவியலில் வரும், விசை, திசை , உந்தம், நிலைமம் இப்படி இன்னும் நிறைய..  ஆன்மீகத்திலும் இருக்கிறது சொற்கள் மற்றும் சொல்லப்பட்ட விதம்  தான் வேறு. கர்மா,வினை, சம்ஸ்காரம், ஜென்மம், புண்ணியம் , பாவம் இப்படி. 


அறிவியலில் சொல்லப்பட்டவை அனைத்தும் வெளி உலகம் சார்ந்தவை.(external) .
ஆன்மீகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உள்நிலை சார்ந்தவை (Internal).


அண்டத்தில் என்ன நிகழ்கிறதோ அதுவே இந்த பிண்டத்திலும் நிகழ்கிறது.  

(சனாதன தர்மத்தில்) இங்க பிரச்சனை என்னன்னா நாம முடிவு பண்ணி வச்சிருக்கற கடவுள் ஒரு உருவம், பெயர்,அவர் இது எல்லாம் பண்ணுவார், இப்படி எல்லாம் இருப்பார், இங்க இருப்பார் என்று ஒரு தீர்மானத்தோட இருக்கறது தான்.அதனால 'இறைவன்/கடவுள் ' அப்படின்னு சொன்ன உடனே நமது மனம் அந்த உருவத்துடன் ஒப்பிட்டு முடிவெடுக்க ஆரம்பிச்சிடுது.

கடவுளை இப்படி தான் இருப்பார் இங்க தான் இருப்பார் இது  எல்லாம் தான் செய்வார் அப்படின்னு முடிவு பண்ணிணா? அது கடவுளாய் இருக்க முடியும்மா?

வானத்தில் உள்ள நிலவை அங்கே பார் என்று ஆள்காட்டி விரலால் காட்டினால் நிலவை - பார்ப்பதை, அதன் அழகை ரசிப்பதை, அதனை உணர்வதை விடுத்து காட்டிய விரலை விரல் தான் நிலவு என்று முடிவு செய்வது போல். காட்டும் பொருளை மட்டுமே  கடவுளாய் பார்கின்றோம். அது நமக்கு எதை உணர்த்துகிறது என்று உணர்வது இல்லை.

இப்பொழுது மேலே நான் கேட்ட கேள்விக்கு  " விஞ்ஞானிகளுக்கும் - நமது ஞானிகளுக்கும் உள்ள வேறுபாடு  என்ன? "  பதில் கிடைத்ததா ? 

உதாரணமாக ஐன்ஸ்டீன் சொன்னதும் நமது ஞானிகள் சொன்னதும் ஒன்றுதான். ஐன்ஸ்டீனுக்கு தெரிந்தது எல்லாம் அதை கணிதமாய், கோட்பாடாய், சமன்பாடாய் கண்டுபிடித்து சொன்னது மட்டுமே. அதை வைத்து நிறைய கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. - அப்படி கண்டுபிடிக்க பட்டவை எல்லாம் எதற்க்காக?   

நமது ஞானிகள் நமக்கு சொன்னவை எல்லாம் அவர்கள் உணர்ந்து நமக்கு சொன்னது மட்டும் அல்ல. நமது வாழ்வியலை உன்னதமாக உணர்ந்து வாழ அவர்கள் உணர்ந்ததை நாமும் உணர நமக்கு கொடுத்து சென்றவை.

நமது இந்திய மண்ணில் அவர்கள் வகுத்து கொடுத்த அனைத்தும் அவர்கள் உண்மையாய் உணர்ந்து நமக்கு கொடுத்தவை.  

எளிமையாக சொல்ல வேண்டுமானால். உதாரணமாக நமக்கு தண்ணீர் தாகம் எனில் நமக்கு தேவை தண்ணீர் வெறும் H2O  சமன்பாடு அல்ல. அல்லது நமக்கு தண்ணீர் தாகமே எடுக்காத நிலை. நமது ஞானிகள் அதை உணர்ந்து, அதை குடித்து , குளித்து அதன் பயன் அறிந்து எல்லாவற்றையும் அறிந்து தண்ணீராகி நமக்கு கொடுத்து சென்றது.விஞ்ஞானிகள் போல் அது இப்படி இது  அப்படி என்று நிரூபிப்பது மட்டும் அல்ல.

விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் எல்லாம் நமது வசதிக்காக, சந்தோசத்திற்காக கண்டுபிடிக்க பட்டவை. (தலையை சுத்தி மூக்க தொடறது ).
மெய்ஞானம் நம்மை எப்பொழுதும் ஆனந்தத்தில் வைத்திருப்பது. 

அப்படி நமது ஞானிகள் நமக்கு கொடுத்து சென்றது என்ன?

அவர்கள் நமக்கு கொடுத்து செல்லாதவையே இல்லை.அனைத்தும் மிக ஆழ்ந்த உள்நோக்குடன் மோட்சத்தை நோக்கி நம்மை கொண்டு செல்பவை. நம் அன்றாட வாழ்வில் நமக்கே தெரியாமல் நம்முடன் கலந்தவை.

எடுத்துக்காட்டாக-நமது கலாச்சார உடை - வேஷ்டி,சேலை போன்றவை. அதை அணிவதில் இருந்தே விழிப்புடன் இருந்தால் உணரமுடியும். ( நீங்கள் உணர்ந்தது  உண்டா அதன் ஆழம்?) அவற்றின் மகத்துவம் தெரியாமல் மேற்கத்திய ஆடை மோகம் வீட்டில் கூட அரைகால் ஆடை, கைலி போன்றவை.வசதியை கடந்து சிறிது உள்நோக்கிய தேடல் அதை உணர்த்தும்.

நமது உணவு, உண்ணும் முறை,விருந்தோம்பல், நடனம், ஓவியம், வழிபாடு, பண்டிகைகள், திருமணம், கல்விமுறை இப்படி  காலை எழுவது முதல் உறங்குவது வரை,  பிறப்பு முதல் இறப்பு வரை நமது கலாச்சாரமாக பண்பாடாக நமக்கு கொடுத்துச் சென்றவர்கள்  யார் என்று பாருங்கள்.

நான் மிகவும் அதிசயத்த சில விசயங்கள் நமது பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் எப்படி இத்தனை தலைமுறை தாண்டி இன்னும் சனாதன தர்மத்தில் நிலைத்து இருக்கிறது ? தந்தை சொல்வதையே மகன் கேட்ப்பதில்லை  அப்படி இருக்க, பேசுவதற்கு மொழி கூட தெரியாமல் அடிமை பட்டு கிடந்தது எத்தனை ஆண்டுகள்.  அவை அனைத்தையும் கடந்து இன்னும் நம்முள் நமது கலாச்சாரம் பண்பாடு நிலை பெற்றது எப்படி?  தனி சட்டம் இல்லை, வெளியேறினால் வெட்டுவேன் சொல்ல யாரும் இல்லை. எந்த நிர்பந்தமும் இல்லை இருந்தும் காலத்தால் அழிக்க முடியாத அளவில் நமது பண்பாடு கலாச்சாரம் . எவ்வளவு உயிரோட்டம் மற்றும் உண்மையாய் இருந்தால் அவை நம்முள் நிலைபெற்றிருக்கும் ?

நண்பர்களே! மீண்டும் ஒருமுறை இந்த பதிவை வைத்து எந்த தீர்மானத்திற்கும் வரவேண்டாம். உங்களுள் தேடல் இருக்கட்டும். நமது சனாதன தர்மத்தின் ஆழத்தை இதுவரை நாம் கண்டறிந்த அறிவியலுடன் ஒப்பிட்டது. உங்களின் தேடலின் தீவிரத்தை அதிகபடுத்தவே அன்றி முடிவை கூறுவதற்கு அல்ல. அதுவும் அன்றி சனாதன தர்மத்தின் உன்னதத்தை உணர மட்டுமே முடியும். இன்றைய அறிவியலுடன் ஒப்பிடுவது மற்றும்   
அறிவினால் அளக்க நினைப்பது மஹா சமுத்திரத்தை உள்ளங்கையில்  அள்ள அல்லது அளக்க முயல்வது போன்றது. 


நன்றி...